அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தேசிய குழு முடிவின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் கரோனா கால நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும் புதுச்சேரி மறைமலையடிகள் சாலையிலுள்ள சுப்பையா சிலை அருகில் மாநிலத் தலைவர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது கரோனா ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ10,000/- நிவாரண நிதி வழங்க வேண்டும், வேலை இழந்துள்ள இளைஞர்களுக்கு மாதம் ரூ10000/- மூன்று மாத காலத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை கரோனா ஊரடங்கு முடிந்தபின்பு இரண்டு வார காலம் சிறப்பு வகுப்பு நடத்தி அதன்பிறகு நடத்திட வேண்டும், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கரோனா காலம் முடியும் வரையில் மாதத் தவணைத் தொகை வசூலிப்பதை தடை செய்திட வேண்டும், மின் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், அரசின் உத்தரவுகளை மீறி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை தடை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட முழுக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அந்தோணி, மாநில துணை செயலாளர் எழிலன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரஞ்சிதா, சசிதரன், முருகன், சிவராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜீவா, பெர்னா, சரவணன், புரட்சிதாசன், கவிதாசன் உட்பட பலர் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.