57 பதவியிடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ள நிலையில், திமுக 3 இடங்களுக்கும், காங்கிரஸ் ஒரு இடத்திற்கும், அதிமுக 2 இடங்களுக்கும் வேட்புமனு தாக்கல் செய்தது. 7 பேர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட கல்யாண சுந்தரம், கிரி ராஜன், ராஜேஷ் குமார், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப. சிதம்பரம், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், தர்மர் ஆகிய ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சுயேட்சையாக போட்டியிட்ட 7 வேட்பாளர்களுக்கு எந்த சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவும் இல்லாததால் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்தியா முழுவதும் 57 இடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் எஞ்சியுள்ள இடங்களுக்கு மட்டும் வரும் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.