Skip to main content

ராஜஸ்தான் தேர்தல் தேதி மாற்றம்!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Rajasthan election date change

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதற்காகக் கடந்த வாரம் மாநிலத் தேர்தல் பார்வையாளர்களை வரவழைத்து, தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி இருந்தது. அதே சமயம் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முடிவடைய உள்ள சூழலில் அதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு 5 மாநிலத் தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 

அந்த அறிவிப்பின்படி, 3.17 கோடி வாக்காளர்களையும், 119 தொகுதிகளையும் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நவம்பர் மூன்றாம் தேதி தொடங்குகிறது. 5.25 கோடி வாக்காளர்களையும், 200 தொகுதிகளையும் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. 5.06 கோடி வாக்காளர்களையும், 230 சட்டப் பேரவைகளையும் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

 

சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனுத்தாக்கல் 13.10.2023 அன்று தொடங்குகிறது. சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் 21.10.2023 அன்று தொடங்குகிறது. டிசம்பர் மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதேபோல் மிசோரத்தில் நவம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 13.10.2023 அன்று தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற இருந்த ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி அதிக திருமணங்கள் நடைபெறும் முகூர்த்த நாள் என்பதால் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்கு எண்ணும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்