இந்தியா - சீனா இடையேயான லடாக் எல்லையில், தற்போதைய நிலைகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (11.02.2021) மாநிலங்களவையில் விளக்கமளித்தார். அப்போது இந்திய படை, ஃபிங்கர் 3 பகுதியில் இருக்கும் நிரந்தர தளத்தில் இருக்கும் என அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, பிரதமர் சீனாவிற்கு எதிராக நிற்கமுடியாத கோழை எனவும், இந்தியாவின் பகுதியை சீனாவிற்கு கொடுத்தது ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி, இந்த நாட்டின் பிரதேசத்தைப் பாதுகாப்பது பிரதமரின் கடமை. அவர் அதை எப்படி செய்வார் என்பது அவருடைய பிரச்சினை, என்னுடையது அல்ல. சீனாவிற்கு எதிராக நிற்கமுடியாத பிரதமர், ஒரு கோழை. அவர் நமது இராணுவத்தின் தியாகத்தின் மீது உமிழ்கிறார். அவர் நமது இராணுவத்தின் தியாகத்திற்கு துரோகமிழைக்கிறார். இந்தியாவில் உள்ள யாரும் இதனை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், "கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இப்போது, நமது படைகள் ஃபிங்கர் 3 இல் நிறுத்தப்படுவதைக் காண்கிறோம். ஃபிங்கர் 4 நமது பிரதேசமாகும். இப்போது, ஃபிங்கர் 4 லிருந்து ஃபிங்கர் 3 க்கு நகர்ந்துள்ளோம். மோடி ஏன் நமது பிரதேசத்தை சீனாவிற்கு கொடுத்துவிட்டார்" எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.