பிரதமரின் வருகையையொட்டி, இரண்டு கம்பெனி துணை ராணுவப் படை வீரர்கள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர்.
பிப்ரவரி 25- ஆம் தேதி அன்று காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குச் செல்கிறார். அங்கு புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர், பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். இந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்புக்காக இரண்டு கம்பெனி துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர்கள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர்.
அதேபோல், புதுச்சேரி சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அன்று மதியம் மீண்டும் சென்னை வரும் பிரதமர் நரேந்திரமோடி, தனிவிமானம் மூலம் கோவை மாவட்டத்திற்கு வருகிறார். அங்கு முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து, கொடிசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன்ரெட்டி, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே. சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி கோவையில் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.