புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு பயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புதுச்சேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ். இவரது மனைவி பரிமளம். இத்தம்பதியருக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், ஹேமச்சந்திரன் (வயது 20) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக துரைராஜும் பரிமளமும் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தனது தாயாருடன் வசித்து வந்த ஹேமச்சந்திரன் பிளஸ் 2 முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இருப்பினும் கடந்த இரு முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் போதிய மதிப்பெண் பெறாததால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மூன்றாவது முறையாக நேற்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நீட் தேர்வு குறித்த பயத்தால் மன அழுத்தத்தில் காணப்பட்ட ஹேமச்சந்திரனுக்கு அவரது தாயாரும் சகோதரியும் ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் தனது அறையில் ஹேமச்சந்திரன் நேற்று படித்துக் கொண்டு இருப்பதை இரவு 1 மணியளவில் பரிமளா பார்த்து விட்டு உறங்கச் சென்றுள்ளார். அதன் பின்னர் நேற்று காலை வழக்கம் போல் எழுந்து மகன் அறைக்குச் சென்று அவர் பார்த்த போது ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஹேமச்சந்திரன் அறையில் இருந்த ஒரு கடிதத்தில், "நாம் அனைவரும் ஒரே இடத்தில் வசித்தாலும் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். நான் இதுவரை வாழவே இல்லை. அதனால் வெளியேறி விடுகிறேன். எனது அம்மாவை யாரும் குறை கூற வேண்டாம். இது என்னுடைய முடிவு" என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். நீட் தேர்வுக்கு பயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.