புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கல்விக்கான கட்டணத் தொகையை 225 மடங்கு உயர்த்தியதால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து பல்கலைக்கழக கட்டணக் கொள்ளையைக் கண்டித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 19 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களை கடும் அவதிக்குட்படுத்தி வேடிக்கை பார்க்கும் மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தையும், கட்டண உயர்வை கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கும் ஆளுநரையும், புதுச்சேரி அரசையும் கண்டித்து நடைபெற்று வரும் இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நாளை (25/02/2020) புதுச்சேரி வருகை தரும் துணை ஜனாதிபதி அவர்களுக்கு கருப்புக்கொடி போராட்டம் நடத்தி அவரது கவனத்தை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தியும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களும் மாநிலம் தழுவிய மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் ராஜா திரையரங்கம் அருகில் மாணவர் கூட்டமைப்பு துணை தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்திலும், இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் ஜெயபிரகாஷ் தலைமையிலும், தவளக்குப்பம் ராஜீவ் காந்தி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் முருகன் ஷேக் தலைமையிலும், தாகூர் கலைக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பு துணைச் செயலாளர் தமிழ்வேந்தன் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தலைவர் முரளி தலைமையிலும், சமுதாயக் கல்லூரியில் இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன் தலைமையிலும், மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முத்துக்குமார் மணி தலைமையிலும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த போராட்டங்களை அனைத்து மாணவர் மற்றும் இளைஞர் கூட்டு இயக்கத்தின் இந்திய மாணவர் சங்கம், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு, திமுக மாணவர் அணி, அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த மாணவ பிரதிநிதிகள் ஒருங்கிணைத்தனர்.
ஒரே நாளில் அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.