
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பிரபலங்கள், பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் பாஜக, ராமர் கோவிலை அயோத்தியில் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக ராமர் கோவில் விவகாரத்தை வைத்து பிரச்சாரம் நடத்தி இருந்தது.
அதே சமயம் தொடர்ந்து பாஜக இரண்டு முறை மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. கோவில் வேலைகள் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில், பாஜக அரசு தேர்தலை காரணம் காட்டி முன்கூட்டியே கோவிலை திறப்பதாகவும், இது அரசியல் செயல்திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.