
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராக பதவியேற்றதிலிருந்து எட்டு ஆண்டுகளாக இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிவருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

அப்போது அங்கு இராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக எனது குடும்பமாக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவது இந்த ஆண்டு எனக்கு கிடைத்த பாக்கியம். புதிய இந்தியா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, அன்பு, தியாகம், இரக்கம், மகத்தான திறமை, தைரியம் உள்ளிட்டவையின் கலவையாக இந்த புதிய இந்தியா உருவாகியுள்ளது. கார்கில் பகுதியில் எதிரிகளுக்கு நமது ராணுவ ஆயுதப்படை தகுந்த பதிலடி கொடுத்துவருகிறது. இதுவே நமது இராணுவ வீரர்களுக்கு கிடைத்த பெருமைக்கான சாட்சி. ஒரு நாட்டின் துணிச்சலான வீரர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அந்த நாடு ஒரு பொழுதும் அழியாது. இமய மலை போல் நம் இராணுவம் இருப்பதால் நமது நாடு பெருமை கொள்கிறது” என்று கூறினார்.