இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்கள் தொகை என்பது சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. கிட்டதட்ட 130 கோடியைக் கடந்து இந்த எண்ணிக்கை சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் தொகையை வரையறை படுத்த அரசு முன்வர வேண்டும் என்று நீண்ட நாட்களாகச் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள். மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக மாறும் என்றும், வேலை இல்லாத் திண்டாட்டம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இதனை ஆதரிப்பவர்கள் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் பலர் தனி மனித உரிமையில் அரசு ஒருபோதும் தலையிட அனுமதிக்கக் கூடாது என்று குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சட்டீஸ்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் இதுதொடர்பாக பேசும் போது, விரைவில் இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு அடுத்து வரும் நாட்களில் இணையவாசிகளின் எதிர்வினைகள் எவ்வாறு இருக்கும் என்பது அறியும் ஆவல் அனைவருக்கும் எழுந்துள்ளது.