இந்தியாவில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மாநில அரசுகள், தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. டெல்லி அரசும் தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிகளவில் வராததால் டெல்லி அரசு, தேர்தலின்போது வாக்குசாவடிகளாக செயல்படும் இடங்களில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த தொடங்கியுள்ளது. இதன்மூலம் மக்கள், தாங்கள் வழக்கமாக வாக்கு செலுத்தும் இடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
மேலும், இவ்வாறு வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி செலுத்தபடும்போது, பூத் அதிகாரி ஒருவர் வீடு வீடாகச் சென்று மக்களைத் தடுப்பூசி செலுத்த அழைப்பு விடுத்ததுவருகிறார். இந்தப் புதிய முயற்சி குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "மக்கள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை. எனவே அவர்கள் அழைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே இத்திட்டம் தொடங்கப்பட்டது. மக்கள் வாக்களிக்கும் இடத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. வாக்குச்சாவடிகள் தடுப்பூசி மையங்களாக மாறியுள்ளன. பூத் அதிகாரிகள், வீடு வீடாகச் சென்று எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்பதைத் தெரிவிக்கும் காகிதத்தை வழங்கி, அவர்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கும் மக்களிடையே விழிப்புணர்வையும் அவர்கள் ஏற்படுத்துகிறார்கள்" என தெரிவித்தார்.