கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தற்போது வரை இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை151 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை செய்து வருகிறார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
கரோனா பரவாமல் கட்டுப்படுத்துவது, மருத்துவ வசதி அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல்வர்களுடன் ஆலோசனை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே ஒரு முறை மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை செய்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று ஆலோசனை செய்து வருகிறார்.