டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று (31.03.2024) ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு -காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரெக் ஓ பிரையன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சரத்பவார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, சுனிதா கெஜிரிவால் என 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், “கிரிக்கெட்டில் அம்பயர்களுக்கு அழுத்தம் கொடுத்து, வீரர்களை விலைக்கு வாங்கி, கேப்டன்களை மிரட்டி ஜெயிப்பதற்கு பெயர் மேட்ச் ஃபிக்சிங் (MATCH FIXING) எனச் சொல்வார்கள். அதுபோலதான் மக்களவைத் தேர்தலில் மேட்ச் ஃபிக்சிங் செய்து பிரதமர் மோடி வெல்ல முயல்கிறார். இங்கு அம்பயர்களை தேர்வு செய்ததே பிரதமர் மோடிதான். போட்டி தொடங்குவதற்கு முன்பே எங்கள் அணியைச் சேர்ந்த இருவரை கைது செய்துவிட்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மேட்ச் ஃபிக்சிங், சமூக வலைதளங்கள், ஊடகங்களுக்கு அழுத்தம் தருவது இவையெல்லாம் இல்லையென்றால் பா.ஜ.க.வால் மக்களவைத் தேர்தலில் 180 இடங்களை கூட வெல்ல முடியாது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றினால் நாடு தீப்பற்றி எரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனப் பேசினார்.