டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க செயற்குழு கூட்டம் இன்று (18-02-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, “தேர்தலே இனிதான் நடக்க உள்ளது. ஆனால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்கள் நாட்டுக்கு வர சர்வதேச அரசுகளிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இது எதை குறிக்கிறது? பா.ஜ.க மீண்டும் வெற்றி பெறும் என்பதில் சர்வதேச நாடுகள் முழு நம்பிக்கையுடன் உள்ளன.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைப்பது அரசியல் லாபத்திற்கோ பதவியை அனுபவிப்பதற்கோ இல்லை. இந்தியாவின் நன்மைக்காகவே மூன்றாவது முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்கிறேன். என்னுடைய வீட்டை பற்றி நான் நினைத்திருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் புதிய உயரத்தை எட்டியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியா முன்பை விட மிக வேகமாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.