புதுச்சேரியில் ஏற்கனவே ஏராளமான அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகள் உள்ளன. இந்நிலையில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசு ஏராளமான மதுபானக் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்தப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம், உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடையைத் திறக்க அனுமதி கொடுத்து தனியார் மதுபானக் கடையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி 'உழவர்கரை மதுபானக் கடை எதிர்ப்பு போராட்டக் குழு' ஒன்றை உருவாக்கி மதுபானக் கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களுக்கு ஆதரவாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பா.ஜ.க ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், பொதுமக்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. சிவசங்கரன், "பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என முதலமைச்சரிடம் மனு கொடுத்திருந்தும், அதையும் மீறி மதுக்கடைக்கு அனுமதி கொடுக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் ஆதரவு கொடுத்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். உடனடியாக முதலமைச்சரும் அரசும் இந்த மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்பகுதி பொதுமக்களே மதுக்கடையை அடித்து உடைத்து மூடும் சூழ்நிலை ஏற்படும். இப்பகுதி மக்களுக்கு ஆதரவாக நான் எப்போதும் உறுதுணையாக இருந்து மதுக்கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம்" என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.