கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஜம்மு காஷ்மீரின் முக்கிய எதிர்க்கட்சிகள் உட்பட நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மத்திய அரசும் ஜம்மு காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்த்து வழங்கப்படும் என கூறிவருகிறது.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த மத்திய அரசு, அண்மையில் ஜம்மு காஷ்மீர் கட்சிகளோடு ஆலோசனை நடத்தியது. இதில் கலந்துகொண்ட ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள், முதலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கிவிட்டு பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசு, சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் முடிவில் உறுதியாக உள்ளது. மாநில அந்தஸ்தை வழங்காமல் சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் மத்திய அரசின் இந்த முடிவை ஜம்மு காஷ்மீரின் அரசியல் கட்சிகளும் காங்கிரஸும் எதிர்த்து வருகின்றன.
இந்தநிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்திரி தலைமையிலான நாடாளுமன்ற பொதுகணக்கு குழு, ஜம்மு காஷ்மீருக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீநகர், டிராஸ், கார்கில், லே ஆகிய பகுதிகளுக்கு இந்த நாடாளுமன்ற பொதுகணக்கு குழு செல்லவுள்ளதாகவும், கார்கிலில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளின் நிலை குறித்தும், அப்பகுதியில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பொதுக்கணக்கு குழு ஆராய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பிறகு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜம்மு காஷ்மீர் செல்லவிருப்பது இதுவே முதன்முறை என்பதால், இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.