பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுற்ற நிலையில், நேற்று காலை முதல் வாக்கு என்னும் பணிகள் தொடங்கின. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் 125 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ.க. 74 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 தொகுதிகளிலும், விகாஸ்சீல் இஷான் கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. லாலுபிரசாத் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல அசாதுதின் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாஜகவின் ‘பி டீமாக’ செயல்பட்டதாக ஏஐஎம்ஐஎம் கட்சி மீது பீகார் மாநிலத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய ஓவைசி, "அரசியலில் தவறுகளில் இருந்தே பாடம் கற்றுக்கொள்ள முடியும். எங்கள் கட்சியின் பீகார் தலைவர் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்தார். ஆனால், எங்களுடன் கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை. பெரிய கட்சிகள் எங்களைத் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தின. முஸ்லீம் தலைவர்களையும் நாங்கள் சந்தித்தோம். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. முடிவுகளுக்குப் பிறகு தங்களின் விரக்தியை மறைக்கவே எங்களை ‘பி டீம்’ எனக் கூறுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.