ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது. அதில் சத்தீஸ்கர் தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. மேலும் டிசம்பர் 7 ஆம் தேதி தெலுங்கானா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று பாஜகவும், காங்கிரஸும் பல திட்டங்களை வகுத்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே வெற்றிபெற்ற தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சியும் இவர்களுடன் போட்டிப்போட்டே வெற்றிபெற வேண்டிய நிலையில் உள்ளது.
நேற்று நிர்மல் பகுதியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைஷி,” இந்த பிரச்சாரத்தை நடத்த வேண்டாம் என்று காங்கிரஸ் சார்பில் எனக்கு 25 லட்சம் விலை பேசப்பட்டது. இதற்கு மேல் அவர்களின் அகந்தையை நிரூபிக்க ஆதாரம் தேவையில்லை. என்னை விலை வாங்கவே முடியாது. அவர்கள் நினைக்கின்ற ஆள் நான் இல்லை” என்றார். அதேபோல இந்த பிரச்சாரத்தில் பாஜகவை பற்றியும் விமர்சித்தார். இந்த இரு தேசிய கட்சிகளுக்கும் எதிரானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காங்கிரஸ் இதை வன்மையாக கண்டித்துள்ளது. ”ஒவைஷி பாஜகவுக்கு உதவ இவ்வாறு பேசுகிறார்” என்று நேற்று காங்கிரஸ் மீது வைத்துள்ள குற்றச்சாட்டிருக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.