18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மத்தியப்பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு கடும் சவாலை கொடுத்துள்ளது 'நோட்டா'. நான்காம் கட்ட தேர்தல் கடந்த மே 13ம் தேதி இந்தூர் தொகுதியில் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் அக்ஷை கண்டி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது அவர் தன்னுடைய மனுவை திரும்பப் பெற்றதோடு பாஜகவிற்கு தாவி விட்டார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரசின் மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால் இந்தூரில் காங்கிரஸ் போட்டியிடாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பாஜகவிற்கு எதிரான பலம் வாய்ந்த வேட்பாளர் எதிரணியில் இல்லாதது பாஜகவிற்குக் கூடுதல் பலத்தை கொடுத்திருந்தது. ஆனால் இந்தூர் தொகுதி மக்கள் நோட்டாவிற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தது காங்கிரஸ். இதன் பாதிப்பு வாக்கு எண்ணிக்கையில் அப்படியே பிரதிபலித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சங்கர் லால் வானி முதலிடத்தில் இருந்தாலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது 'நோட்டா' இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களித்தனர். மொத்தமாக பார்த்தால் நோட்டாவிற்கு 14.03% வாக்குகள் கிடைத்தது. இதனை குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைமை 'ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் பாஜகவிற்கு இது ஒரு பாடம்' என பதில் கொடுத்துள்ளது.