காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம், மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது.
பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் வந்த ராகுல் காந்தியின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தை கடந்து தற்போது ஒடிசா மாநிலத்திற்கு நுழைந்துள்ளது. ஒடிசா மாநிலம், சுந்தர்கார் நகருக்கு வந்த ராகுல் காந்தி, அங்குள்ள பழங்குடியின மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர், அங்கு பேசிய ராகுல் காந்தி, “ஒடிசா மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளக் கட்சியுமான நவீன் பட்நாயக்கும், பிரதமர் மோடியும், ஒடிசாவில் கூட்டணி ஆட்சியை நடத்துகிறார்கள். மாநில அரசின் நவீன் பட்நாயக் நிர்வாகம், மத்திய அரசுடன் இணைந்து மக்களை வஞ்சிப்பதற்கான ஒரு ரகசிய கூட்டணியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அவர்கள் கைகோர்த்து ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வை பிஜேடி ஆதரிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதிலிருந்து இந்த உண்மையை நாம் அறியலாம். இந்த ரகசிய கூட்டணியை உடைப்பதற்கு காங்கிரஸ் கடுமையாக போராடி வருகிறது.
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் நாட்டில் வெறுப்பை மட்டுமே விதைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அவர்களது ஆட்சியில் நீதி மறுக்கப்படுகிறது. மாநிலத்தின் இயற்கை வளங்களையும், சொத்துகளையும் கொள்ளையடிப்பதற்கு 30 கோடீஸ்வரர்கள் ஒடிசாவுக்குள் புகுந்துள்ளனர். அவர்களிடம் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பழங்குடியினர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், பயப்பட வேண்டாம். உங்கள் காடு, தண்ணீர் மற்றும் நிலம் கோடீஸ்வரர்களின் கைகளுக்கு போக நாங்கள் விடமாட்டோம்” என்று கூறினார்.