உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷகாரன்பூரில் 19 வயது புலம்பெயர் தொழிலாளி ஒருவர் உண்ண உணவின்றி பட்டினியால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்தத் திடீர் முடக்கத்தால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையோ, வருமானமோ இல்லாத நிலையில், அவர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் சூழலும் நிலவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாபில் மெக்கானிக் ஷாப்பில் பணியாற்றிவந்த உத்தரப் பிரதேச மாநிலம் ஷகாரன்பூரைச் சேர்ந்த விபின் குமார் எனும் 19 வயது புலம்பெயர் தொழிலாளி, லாக்டவுனில் கடை மூடப்பட்டதால் வேலையில்லாமல், கையில் பணமும் இல்லாமல் 350 கி.மீ. தொலைவு நடந்து ஷகரான்பூர் அருகே இருக்கும் சொந்த ஊரான ஹர்தோய் சுர்சாவுக்குச் சென்றுள்ளார்.
சுமார் 6 நாட்கள் பயணத்திற்குப் பிறகு தனது சொந்த ஊரை நெருங்கிய விபின், ஊருக்குச் செல்வதற்கு முன்னதாகவே பட்டினியால் சுருண்டு சாலையில் விழுந்து உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உத்தரப் பிரதேச அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் தலைமைச்செயலாளர் அடுத்த 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.