சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை எப்போதும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால், கர்நாடகாவில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை கூட்டம் கூட்டமாக வாங்கிச் செல்கின்றனர்.
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள உண்ணூர் கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக அங்குள்ள கடைகளில் விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகப் பரவிய தகவலால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை போட்டிப் போட்டு சிப்ஸ் பாக்கெட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், கடைகளில் உள்ள சிப்ஸ் பாக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து உள்ளன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பெயரில் விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அக்கிராமத்தில் உள்ளவர்கள் இதுவரைக்கும் தங்களுக்கு சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மீண்டும் அதே நிறுவனங்கள் பெயரில் கடைகளில் விற்பனைக்கு வந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் பணம் ஏதும் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இச்செயலானது, சிப்ஸ் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பிரபலமாக்குவதற்கு இதுபோன்று செய்துள்ளதாகவும், சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்த ரூபாய் நோட்டுகள் உண்மையான நோட்டுகள்தானா என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.