Skip to main content

கெவின் குடும்பத்திற்காக வலிமையாக இருக்கிறேன்! - மீண்டு வந்த நீனு சாக்கோ

Published on 15/06/2018 | Edited on 15/06/2018

கேரளாவில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டவரின் மனைவி, அந்தத் துயரத்தில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 
 

neenu

 

 

 

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் கெவின் ஜோசப். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த நீனு எனும் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதனை நீனுவின் குடும்பத்தினர் எதிர்க்கவே, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். 
 

ஆனால், நீனுவின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கெவின் ஜோசப்பைக் கடத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு மே 30ஆம் தேதி கெவின் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கெவின் ஜோசப்பின் மனைவி கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி தனிமை வாழ்க்கையில் வாழ்ந்துவந்தார்.
 

neenu

புகைப்படம் : மாத்ருபூமி, மலையாளம்

 

 

 

இந்நிலையில், தற்போது கெவின் ஜோசப்பின் வீட்டில், அவரது குடும்பத்தினருடன் வசித்துவரும் நீனு, மீண்டும் கல்லூரிப் படிப்பைத் தொடங்கியுள்ளார். தோழிகளின் உதவியோடு மீண்டும் கல்லூரிக்குச் செல்லும் நீனுவின் புன்னகை நிறைந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவின் மாத்ருபூமி இதழில் வெளியான இந்தப் புகைப்படம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் பேசும் நீனு, ‘அறைக்குள் அடைந்து கிடப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறேன். என் தோழிகள் பெரிதும் உதவுகிறார்கள். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் விருப்பம் இருக்கிறது. ஜோசப் குடும்பத்தினர் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்காகவேனும் வலிமையாக இருக்க வேண்டும். என்னுள் இருக்கும் வலிமையை அந்தப் புகைப்படம் பேசுகிறது. கெவினுக்கு அது நிறையவே பிடிக்கும். அப்படியே இருக்க விரும்புகிறேன்’ என பேசியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்