Skip to main content

வேறு சமூகத்தை சேர்ந்தவருடன் திருமணம்... மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தந்தை!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

mp man

 

மத்திய பிரதேச மாநிலத்தின் வனப்பகுதியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி ஒரு பெண்ணின் உடலையும், குழந்தையின் உடலையும் கண்ட வனக்காவலர்கள், இதுதொடர்பாக மத்திய பிரதேச காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, இருவரின் உடலையும் கைப்பற்றிய காவலர்கள், கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.

 

இந்தநிலையில், பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை கைதுசெய்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் அந்தப் பெண்ணை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

 

கொலை செய்யப்பட்ட பெண், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருணம் செய்துகொண்டு மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தின் ஷுஜல்பூர் பகுதியில் வசித்துவந்துள்ளார். இந்தநிலையில், கடந்த அக்டோபர் மாத இறுதியில் அந்தப் பெண்ணின் கணவர் வேலை விஷயமாக வெளியூர் செல்லவே, தீபாவளியைக் கொண்டாட அந்தப் பெண் தனது குழந்தையுடன் தனது மூத்த சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்தக் குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இதனை தனது கணவரிடம் அந்தப் பெண் கூறாத நிலையில், பெண்ணின் சகோதரி தனது தந்தைக்கும், சகோதரனுக்கும் குழந்தை இறந்த விவரத்தைக் கூறியுள்ளார்.

 

இதனையடுத்து, குழந்தையின் உடலை அடக்கம் செய்யலாம் எனக் கூறி அந்த பெண்ணைக் காட்டுப் பகுதிக்குள், அவரது தந்தையும் சகோதரனும் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தங்களது இருசக்கர வாகனத்தைப் பார்த்துக்கொள்ளும்படி பெண்ணின் சகோதரனை நிறுத்திவிட்டு பெண்ணைக் காட்டிற்குள் அழைத்துச் சென்ற தந்தை, அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளார். இது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும், இந்த விசாரணையின்போது, தனது பெண்ணைக் கொல்ல சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்ததாகவும் பெண்ணின் தந்தை கூறியுள்ளார். தற்போது பெண்ணின் தந்தை மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் சகோதரன் மீது கொலை சதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தல் தேதியில் மாற்றம்; வேட்பாளர் உயிரிழப்பால் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தலின் போது நடைபெற இருந்தது. அந்த தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில், பிடல் தொகுதி வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அசோக் பலவி வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி நேற்று முன் தினம் (09-04-24) மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்துவிட்டார். இதனால், ஏப்ரல் 26ஆம் தேதி அன்று பிடல் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தலின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளர் உயிரிழக்கும் வகையில், அந்தத் தொகுதிக்கு வேறு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவிக்க அவகாசம் கொடுக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52ன்படி சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படும். அந்த வகையில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி கடந்த 9ஆம் தேதி உயிரிழந்த நிலையில், பிடல் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இந்தத் தொகுதிக்கான வாக்கு பதிவானது, மூன்றாம் கட்ட தேர்தலின் போது மே 7ஆம் தேதி நடைபெறும்’ என்று அறிவித்துள்ளது.