காணொளிக்காட்சி வழியாக விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெறுவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "வைரஸ் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் வெல்ல முடியாதவர்கள். இந்த இன்விசிபிள் Vs இன்வின்சிபிள் (கண்ணுக்குத் தெரியாத வைரஸ் Vs வெல்லமுடியாத மருத்துவ ஊழியர்கள்) போரில், நமது மருத்துவ ஊழியர்கள் வெற்றி பெறுவது உறுதி. ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம். இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்தில், 1 கோடி மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் முக்கியப் பயனாளிகளில் உள்ளனர்.
மேலும் 22 எய்ம்ஸ் அமைப்பதில் நாடு விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில், எம்.பி.பி.எஸ்ஸில் 30,000 இடங்களையும், முதுகலை பட்டப்படிப்பில் 15,000 இடங்களையும் கூடுதலாகச் சேர்த்துள்ளோம். மேலும், இந்த இக்கட்டான நிலையில், சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் முரட்டுத்தனமான நடத்தை ஏற்கத்தக்கதல்ல என்பதைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.