
புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே நகர்ப் பகுதியில் உள்ள உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் இளைஞர்கள் சீரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் நேரு பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் கஞ்சா போதையில் இருந்த சில இளைஞர்கள் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் உள்ள பெண்களை நேற்று இரவு தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிகிறது.

இந்நிலையில் பலமுறை புகாரளித்தும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறியதாகக் கூறி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை, சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் சமூக ஆர்வலர்கள், ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.