
ஆந்திர விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம்பெறப் பிரார்த்திப்பதாகப் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளனர்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாயுடுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடப்புரத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பாலிமர்ஸ் (LG Polymers industry) இரசாயன ஆலையில் இன்று (07/05/2020) அதிகாலை விஷ வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கி.மீ தொலைவுக்கு விஷ வாயு பரவியதால், அப்பகுதியில் சாலையில் சென்ற மக்கள் பலரும் மயங்கி கீழே விழுந்தனர். இந்த விஷவாயுக் கசிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படையினர் விஷ வாயுவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் விசாகப்பட்டினத்தின் நிலைமை குறித்து எம்.எச்.ஏ (உள்துறை அமைச்சகம்) மற்றும் என்.டி.எம்.ஏ (தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்) அதிகாரிகளிடம் பேசினேன். விசாகப்பட்டினத்தில் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள குறிப்பில், "விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனைவரின் பாதுகாப்பிற்கும் நான் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.