
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இதற்கிடையில், ஜனவரி 29ஆம் தேதியன்று நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், மகா கும்பமேளாவிற்கு வருவதாக சாலை விபத்துகள், டெல்லி ரயில் கூட்ட நெரிசல் போன்ற இன்னல்களையும் பக்தர்கள் சந்தித்தனர். பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த கும்ப மேளாவில் நடந்தாலும், சில துயர சம்பவங்களும் நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதற்காக நபர் ஒருவரை, மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் இந்திரா நகரைச் சேர்ந்தவர் அபய் பண்டிட். இவர் பிரயாக்ராஜ்ஜின் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று, அபய் பண்டிட் புனித நீராடியதற்காக, அர்மான் என்பவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அவரது வீட்டிற்கு வெளியே வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அபய் பண்டிட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட அர்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். நடத்தப்பட்ட விசாரணையில், இரு தரப்பினருக்கும் ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் உண்மையில் மகா கும்பமேளாவில் பங்கேற்றதற்காகவா என்பதை தீர்மானிக்க மேலும் விசாரணை நடந்து வருகிறது.