Skip to main content

அசாம் முதல்வர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்த மிசோரம் போலீஸ்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

assam cm

 

அசாம், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை நிலவிவருகிறது. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.07.2021) மிசோரம் மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்த எட்டு விவசாயிகளின் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இது திங்கட்கிழமை கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் காவல்துறையினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

 

இந்தக் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஐந்து அசாம் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து அசாம் - மிசோரம் எல்லையிலிருந்து இரு மாநில காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டு, மத்திய துணை இராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கலவரம் தொடர்பாக அண்மையில் மத்திய உள்துறைச் செயலாளர், இரு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை டி.ஜி.பிக்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

 

இந்தநிலையில் மிசோரம் போலீசார், அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது கொலை முயற்சி, குற்றச்சதியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசாம் முதல்வர் மீது மட்டுமின்றி, அசாம் மாநில இன்ஸ்பெக்டர் ஜெனரல், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், போலீஸ் சூப்பிரண்டு, கச்சார் மாவட்ட துணை கமிஷனர் ஆகியோர் மீதும், பெயர் குறிப்பிடப்படாத 200 காவல்துறையினர் மீதும் இந்தக் கொலை முயற்சி, குற்றச்சதியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.