திண்டுக்கல் என்ஜிஓ காலனி அருகே இயங்கி வரும் 'சிட்டி' என பெயர் கொண்ட தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் இரவு 9 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் நான்கு மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை என்பதால் பல இடங்களுக்கும் தீ பரவியுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதியில் அணிவகுத்துள்ளது. மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். இதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் இதுவரை இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள், ஒரு சிறுவன், ஒரு குழந்தை என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விபத்து நடந்த மருத்துவமனைக்கு விரைந்தார். தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த ஐ.பெரியசாமி மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 28 பேரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி 'முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்' என உறுதியளித்தார்.
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, எஸ்பி பிரதீப் ஆகியோரும் விபத்து நடந்த இடத்தில் விசாரணையில் இறங்கியுள்ளனர். தீ விபத்தால் மருத்துவமனை லிப்ட் பாதியில் நின்றுள்ளது. அதில் சிக்கிய 6 பேர் புகைமூட்டத்தில் மூச்சுத்திணறி மயங்கி சிக்கி உயிழந்தது தெரியவந்துள்ளது.
பேரிடர் நேரங்களில் குறிப்பாக தீ விபத்து சம்பவங்களில் லிப்ட்டை மக்கள் பயன்படுத்தக்கூடாது. இயந்திரக் கோளாறு காரணமாக அவை பாதியில் செயல் இழக்க கூடும் என்பதால் படிக்கட்டு மற்றும் அவசரமாக வெளியேறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி எக்ஸிட் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.