கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் செருவட்டூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாதன் (62). இவர், கொயிலாண்டி நகர மத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின், உள்ளூர் கமிட்டி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் (22-02-24) செருவட்டூர் அருகே முத்தாம்பி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற திருவிழாவுக்கு பங்கேற்பதாக சென்றார். இதனையடுத்து, அன்று இரவு நடந்த இசை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், தாங்கள் கொண்டுவந்த ஆயுதத்தால் சத்தியநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த சத்தியநாதன், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள், சத்தியநாதனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கல், சத்தியநாதன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சத்தியநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், அபிலாஷ் (30) என்ற நபர், இந்த கொலை சம்பவத்தில் தான் ஈடுபட்டதாக காவல்துறையிடம் சரண் அடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அபிலாஷ் கொயிலாண்டி நகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த போது, அவரை ஓட்டுநர் வேலையில் இருந்து நீக்கி கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் அபிலாஷுக்கு ஆதரவாக சத்தியநாதன் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆத்திரமடைந்த அபிலாஷ், சத்தியநாதனை கொலை செய்துள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து, கொயிலாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (23-02-24) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தியது. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. கேரளாவில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.