மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை, உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, பதாகைகளுடன் முழக்கமிட்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால் அவை அலுவல நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், இன்று (25/07/2022) காலை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதையடுத்து, பிற்பகலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் கூடியது. அப்போது, மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக, மக்களவை உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகியோரை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.