Skip to main content

கர்நாடக காங்கிரஸைக் குறிவைக்கும் திரிணாமூல் - களமிறங்கிய பிரசாந்த் கிஷோர்!

Published on 26/11/2021 | Edited on 27/11/2021

 

prashant kishor

 

திரிணாமூல் காங்கிரஸ், தேசிய அரசியலில் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் கட்சியின் கிளைகளை விரிவுபடுத்தும் முயற்சிகளில் திரிணாமூல் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

 

இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைத் திரிணாமூல் காங்கிரஸ் தங்கள் பக்கம் இழுத்துவருகிறது. இதில் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் முக்கிய பங்கு ஆற்றி வருகிறார்.

 

இந்தநிலையில் நேற்று முன்தின இரவு, மேகாலயா மாநிலத்தில் உள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 11பேர், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் எம்.எல்.ஏவுமான முகுல் சங்மாவின் தலைமையில் திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவினர். இதில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்ததை முகுல் சங்மா செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

 

இந்தநிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர், பெங்களூரில் முகாமிட்டுள்ளதாகவும், அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான எம்.பி.பாட்டீலை சந்தித்து அவரை திரிணாமூல் காங்கிரசுக்கு அழைக்க முயன்றதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பிரசாந்த் கிஷோரை  எம்.பி.பாட்டீல் நேரில் சந்திக்காமல், தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது அவர் திரிணாமூல் காங்கிரசில் இணைய மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

அதேநேரத்தில் பிரசாந்த் கிஷோர், வேறு சில காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்க முயன்று வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்