Skip to main content

‘தாங்கிக் கொள்ள முடியவில்லை’ - 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாயின் கடிதம்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
letter from mother who lost his lives 4-year-old son at goa incident

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத் (39). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருந்தான். தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சுசானா சேத் தனது மகனுடன் கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து, அவர் கடந்த 8 ஆம் தேதி காலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு வாடகை கார் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், சுசானா சேத் இருந்த அறையை சுத்தம் செய்ய பராமரிப்பு ஊழியர் அறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு, ரத்தக் கறைகள் படிந்த ஆடைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். 

இதில் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், சுசானா சேத் பயணித்த வாடகை கார் ஓட்டுநரிடம் தொடர்புகொண்டு அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு வருமாறு போலீசார் கூறியுள்ளனர். அதன்படி, கார் ஓட்டுநர் ஓட்டி வந்த காரை ஜமங்கலா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்த சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுசானா சேத் தனது மகனைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசானா சேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த விசாரணையில், சுசானா சேத்துக்கும் அவரது கணவரான வெங்கட்ராமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் விவாகரத்து வழங்கக் கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகனிடம் பேச அனுமதி அளித்து இருந்தது. அதன்படி,  கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்து பேசிய போது மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார். 

letter from mother who lost his lives 4-year-old son at goa incident

அப்போது, அவரது மகன் தனது தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுது கொண்டிருந்துள்ளான்.  இந்த நிலையில், கணவர் மீது இருந்த அதிருப்தியிலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் கோபத்தின் உச்சியில் இருந்த சுசானா சேத், தனது மகனைக் கொல்ல திட்டமிட்டு தனது மகனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்து, அவன் மயங்கியதும் மூச்சைத் திணறடித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது.

இந்த நிலையில், தனது மகனை கொலை செய்துவிட்டு சுசானா சேத் தன் கண் மையால் எழுதியிருந்த கடித்ததை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசானா சேத் எழுதிய அந்த கடிதத்தில், ‘நீதிமன்றமும், ஒரு பக்கம் எனது கணவரும், மகனை தான் வைத்துக்கொள்ள முடியாமல் அழுத்தம் கொடுக்கின்றனர். இனிமேலும், இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர். தவறான பழக்கங்களை என் மகனுக்கு கற்பித்தார். ஒரு நாள் கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை’ என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.