கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் பலியானர். மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஆஷிஸ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம், பிப்ரவரி 10ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் என்ற கெடுவும் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.