Skip to main content

"தென்னிந்தியர்களைத் தூரப்படுத்திவிட்டு, எப்படி இந்த ஆய்வு செய்யப்படும்?" மத்திய அரசை சாடிய குமாரசாமி...

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

kumarasamy about indian history reasearch team

 

 

இந்தியாவின் தோற்றம், பரிணாமம், வளர்ச்சி குறித்து வரலாறு எழுத மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் தென்னிந்தியர்கள் யாரும் இடம்பெறாததை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இந்தியாவின் தோற்றம், பரிணாமம், வளர்ச்சி குறித்து வரலாறு எழுத மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் இந்தியாவின் தொன்மையும், வரலாறும் நிறைந்துள்ள தென்னிந்தியாவிலிருந்து ஒரு ஆய்வாளர், அறிஞருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. முழுவதும் வட இந்தியர்களை மட்டுமே கொண்ட இந்த 16 பேர் கொண்ட ஆய்வுக்குழுவில் பெண்களுக்கும் இடம் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள குமாரசாமி, "12 ஆயிரம் ஆண்டுகளாக உள்ள இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழுவில் கன்னடரையோ அல்லது தென்னிந்தியாவின் திராவிட பரம்பரையைச் சேர்ந்த ஒருவரையோ நியமிக்காதது துரதிர்ஷ்டம்.

 

அந்த குழுவில் ஒரு பெண் கூட நியமிக்கப்படவில்லை. நிபுணர் குழுவில் கன்னடர் ஒருவர் இல்லாத நிலையில் கர்நாடகத்தின் கலாச்சாரம், பண்பாடு குறித்து நியாயமான ஆய்வு நடைபெறுவது சாத்தியமா? தென்னிந்தியர்களைத் தூரப்படுத்திவிட்டு, ஒட்டுமொத்த தேசத்தின் கலாச்சாரம் எப்படி ஆய்வு செய்யப்படும்?. நாங்கள் இந்த நாட்டை தாயுடனும், பசுவுடனும் ஒப்பிடுகிறோம். பெண்களை வழிபடும் இந்த நாட்டின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் குழுவில் பெண் ஒருவர் இடம் பெறாமல் எப்படி ஆய்வு செய்ய முடியும்?

 

கலாச்சாரம், இதிகாசம், பண்பாடு ஆகிய விஷயத்தில் முழுவதும் வட இந்தியர்களைக் கொண்டுள்ள அந்த குழு ஒருதலைபட்சமாகச் செயல்படும் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. எனவே, அந்த குழுவை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்