குப்பைகளை சுத்தம் செய்யும்வரை கிளம்பாமல் போராட்டம் நடத்திய நீதிபதி பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியின் துணை நீதிபதியாக இருப்பவர் ஏ.எம்.பஷீர். இவர் மாவட்ட சட்டப்பூர்வ சேவைகள் அதிகாரசபையின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் ‘கிளீன் எர்ணாகுளம் சிட்டி’ என்ற திட்டத்திற்காக எர்ணாகுளம் பகுதியில் உள்ள மார்க்கெட்டைப் பார்வையிட சென்றுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
எர்ணாகுளம் மார்க்கெட்டில் கடை நடத்துபவர்கள், வேலை செய்பவர்கள் என பலரும் அங்குள்ள ஒரு பகுதியில் மொத்தமாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பஷீர், இங்குள்ள குப்பைகளை அகற்றும்வரை இங்கிருந்து நகரமாட்டேன் எனக் கூறி குப்பைகளுக்கு நடுவில் அமர்ந்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, அங்கிருந்த குப்பைகள் லாரிகளின் மூலமாக அகற்றப்பட்டன. முழுமையாக அவை அகற்றப்படும் வரை பஷீர் அங்கேயே அமர்ந்திருந்தார். ‘குப்பைகள் இங்கு கொட்டப்படுவது குறித்த தகவல் அறிந்துதான் வந்தேன். ஆனால், என்னை இந்த நிலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தெரியாமல் மக்கள் இப்படி செய்கிறார்கள்’ என பஷீர் தெரிவித்துள்ளார். மேலும், மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கொண்ட குழு ஒன்றை கண்காணிப்பிற்காக நியமித்துள்ளார் பஷீர்.