கேரளாவையே உலுக்கிய வரதட்சணை கொடுமை வழக்கில் இளம்பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரமன்- சஜிதா தம்பதியின் இளைய மகள் விஸ்மயா. ஆயுர்வேதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற விஸ்மயாவுக்கு 21 வயதில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் கிரண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது, 100 சவரன் நகை, 1 ஏக்கர் நிலம், 10 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூபாய் 10 லட்சம் மதிப்புகள் டொயோட்டோ யாரிஸ் கார் என கிரண்குமாருக்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணை கொடுத்துள்ளனர். ஆனால், வரதட்சணை போதாது எனக் கூறி பெரிய சொகுசு கார், அதிகமாக பணம் வேண்டுமென திருமணமான சில நாட்களிலேயே விஸ்மயாவைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார் கிரண்குமார்.
தினந்தோறும் அடித்தும், சூடு வைத்தும் துன்புறுத்தியிருக்கிறார் கிரண்குமார். பொறுத்துப் பொறுத்து பார்த்த விஸ்மயா தன் தந்தையின் இயலாமையை எண்ணி திருமணமான ஒரே ஆண்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்டுள்ள காயங்கள், துன்புறுத்தல்களை வாட்ஸ் அப் மூலம் உறவினருக்கு அனுப்பியிருக்கிறார்.
உறவினர் அழைத்துச் செல்வதாகக் கூறிய, அடுத்த நாளே விஸ்மயா தற்கொலை செய்திருக்கிறார். கேரள மாநில காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பின்னர், 42 சாட்சிகள், 102 ஆவணங்கள் மூலம் விஸ்மயாவின் தற்கொலைக்கு காரணம், கிரண்குமார் தான் என ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இன்று அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனக் கூறிய நீதிபதி, கிரண்குமாருக்கான தண்டனை இந்த சமுதாயத்திற்கு ஒரு உதாரணமாக இருக்கும் என கூறினார். அதன்படி, கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித் தண்டனை விவரங்களை அறிவித்தார். தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு ரூபாய் 12.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.