
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளை மழை நீர் அதிக அளவு தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, பெங்களூரு புறநகர், உடுப்பி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்திற்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி நீர் சாலைகளில் புகுவதால் 2 அடிக்கும் அதிகமான நீர் சாலைகளில் காணப்படுகிறது. சுரங்கப்பாதைகள் மொத்தமும் நீரில் மூழ்கியுள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெல்ல நீர் சூழ்ந்துள்ளது. சர்ஜாபுறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதிகளில் 3 அடிக்கும் மேல் வெல்ல நீர் சூழ்ந்துள்ளது.
சாலைகளில் தேங்கும் வெள்ள நீரில் போக்குவரத்துக்கள் சிக்கிக் கொள்வதும் நடைபெறுகிறது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ள நீரில் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் அடித்து செல்லப்பட்டது. மீட்பும் படையினரும் தன்னார்வத் தொண்டர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை ட்ராக்டர், தீயணைப்பு வாகனம் முதலானவற்றைக்கொண்டு மீட்டுக் கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மரங்கள் ஆங்காங்கு சாய்ந்து விழுவதாலும் ஒசகரே ஏரி கனமழையால் நிரம்பியதால் மழை நீர் சாலைகளில் வழிந்தோடுவதாலும் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.