கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு பல காரணங்களை பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து விலக்கியது தான் பாஜகவின் படுதோல்விக்கு காரணம் என்று முன்னாள் பாஜக அமைச்சர் எம்.பி.ரேணுகாச்சார்யா தெரிவித்துள்ளார்.
தாவண்கெரே மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.பி.ரேணுகாச்சார்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததுக்கு பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டீஸ் தான் காரணம். அதனால் அவர் தானாக முன்வந்து தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், வீரசைவ லிங்காயத், ஒக்கலிகா, ஹலுமாதா, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் திறமை உள்ளவரை மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
நான் எனது கட்சிக்கு எதிராக ஒன்றும் பேசவில்லை. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். அவர்களது உணர்வுகளை மட்டுமே தான் நான் இங்கு பதிவு செய்கிறேன். எடியூரப்பா கர்நாடகா மாநிலம் முழுவதும் மிதிவண்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த கட்சியை கட்டமைத்தார். அவருக்கு துணையாக ஈஸ்வரப்பா, அனந்த்குமார், ஜெகதிஷ் ஷெட்டர் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து கட்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கட்சிக்காக கடுமையாக உழைத்த முக்கியமானவர்களை பாஜக கட்சி புறக்கணித்ததாலும், அவர்களுக்கு வேட்பாளர் சீட் கொடுக்காமல் அவமானப்படுத்தியதாலும் தான் கர்நாடகா தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது.
மேலும், பெங்களூர் மாநகரத்தில் உள்ள தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத அண்ணாமலை அரசியலில் அனுபவமற்றவர். அவர் என்ன ஹீரோவா? இங்கு வந்து பாசாங்கு செய்கிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் பசவராஜுக்கும் சல்யூட் செய்த ஒருவரின் பேச்சை நாங்கள் தேர்தல் நேரத்தில் கேட்க வேண்டியிருந்தது. ஒரு கார்ப்பரேட் கட்சி போல் கர்நாடகா பாஜக கட்சி செயல்பட்டு வருகிறது.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைக்கும் போது பாஜக தலைவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். காலதாமதமாக வந்த பாஜக தேர்தல் அறிக்கை கூட மக்களைச் சென்றடையாமல் விட்டது. அதே போன்று, பாஜக தலைமை கடைசி நேரத்தில் தான் சில வேட்பாளர்களை அறிவித்தனர். இந்த அலட்சியப் போக்கும் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணம். இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை மீண்டும் பிரதமராக பார்க்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். மேலும், அந்த தேர்தலில் நான் போட்டியிட ஆசைப்படுகிறேன் என்ற எனது விருப்பத்தை கட்சிக்கு தெரிவித்துவிட்டேன். அதன் பின் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.