ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியதும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு மூலம், சட்டமன்றத்துடன் கூடிய நாட்டின் மூன்றாவது யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறியுள்ளது. பொதுவாக மாநிலத்திற்கென தனியாக சட்டமன்றம் இருக்கும். அதன்மூலம் குறிப்பிட்ட விவகாரங்களில் தனித்த முடிவுகள் மற்றும் சட்டங்களை இயற்ற முடியும். ஆனால் யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை தனியாக சட்டமன்றம் என்ற அமைப்பு கிடையாது. குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஒருவரின் கண்காணிப்பிலேயே நிர்வாகம் நடைபெறும்.
இந்தியாவில் டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே தனியாக சட்டமன்ற அமைப்பு உள்ளது. ஆனாலும் இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களை தவிர நம் நாட்டில் உள்ள மற்ற எந்த யூனியன் பிரதேசங்கங்களுக்கும் சட்டமன்ற அமைப்பு கிடையாது.
அந்த வகையில் சட்டமன்ற அமைப்புடன் கூடிய நாட்டின் மூன்றாவது யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறியுள்ளது. மீதமுள்ள யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தமன் மற்றும் டியு மற்றும் லட்சத்தீவு போன்ற சட்டமன்ற அமைப்புகள் இல்லாத யூனியன் பிரதேசங்கங்களின் பட்டியலில் லடாக் இணைந்துள்ளது.