2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்த சிவசேனா, மாநிலங்களவையில் ஆதரவு தெரிவிக்க சில நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதுகுறித்து பேசிய சிவசேனா மூத்த தலைவர், இந்த மசோதாவில் இலங்கையின் தமிழ் இந்துக்களுக்கான இந்த மசோதாவில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், "இந்த மசோதா மீதான எங்கள் சந்தேகங்களை பாஜக தீர்க்க வேண்டும். எங்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை என்றால், எங்கள் நிலைப்பாடு மக்களவையில் நாங்கள் எடுத்ததைவிட வித்தியாசமாக இருக்கும். வாக்கு அரசியலுக்காக பாஜக இதனை செய்யக்கூடாது. அது சரியானதல்ல. மீண்டும் ஒரு இந்து-முஸ்லீம் பிளவை உருவாக்க முயற்சிக்காதீர்கள். இலங்கையின் தமிழ் இந்துக்களுக்காக கூட இந்த மசோதாவில் எதுவும் இல்லை" என தெரிவித்துள்ளார். மக்களவையில் மசோதாவிற்கு ஆதரவு தெரிந்திருந்த சிவசேனாவின் இந்த பேச்சு டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.