இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் உரையாற்றிய போது இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்திய மீனவர்கள் அவ்வாறு மீன்பிடிப்பது சட்டவிரோத குற்றம் எனவும் அவ்வாறு மீன் பிடிப்பது தொடர்ந்தால் 2018ன் சட்டப்படி ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருக்கும் விசைப்படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
2018 முதல் தற்போது வரை 80 இந்திய மீனவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கையில் மீன்வளத்துறை அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் எல்லை தாண்டி மீன் பிடித்ததால் நாகை மீனவர்கள் 6 பேரையும் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.