முகமது நபிகள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது டெல்லி, மேற்குவங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் மேற்குவங்க காவல்துறை ஏற்கனவே அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் அவர், இந்த வழக்குகளில் தன்னை கைது செய்ய தடைவிதிக்க வேண்டும், மாநில நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். மேலும், வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு அடுத்த மாதம் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தனர். மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் நுபுர் ஷர்மாவை கைது செய்யவும் இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பித்தனர்.