பசு மாடை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்நிலையில் பசு மாட்டினை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கோவான்ஷ் சேவா சதான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் எஸ் கே கௌல் மற்றும் அபே ஸ்ரீனிவாஸ் ஓகா விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் “மாட்டின் கோமியம் மக்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. அதன் சாணம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே பசுக்களின் பாதுகாப்பு மிக முக்கியம்” என கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாட்டின் தேசிய விலங்கை தேர்ந்தெடுத்து அறிவிப்பது நீதிமன்றத்தின் வேலையா என கேள்வி எழுப்பினர். மேலும் அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை ஏன் தாக்கல் செய்கின்றனர். நீங்கள் நீதிமன்றத்திற்கு வருவதால் நாங்கள் சட்டத்தை காற்றில் பறக்க விட வேண்டுமா என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மனுவை விசாரணைக்கு பெற்றுக்கொள்ள முடியாது எனவும் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாக ஒப்புக்கொண்டார்.