Skip to main content

"குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தாவிட்டால் சாலையில் சடலங்களாக இருக்கும்" - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ!

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

aam aadmi

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. டெல்லியிலும் கரோனா தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவையிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் கரோனா உயிரழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அங்குள்ள தகன மைதாங்கள் உடல்களால் நிரம்பியுள்ளதோடு, ஒரு உடலை தகனம் செய்ய 20 மணிநேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். சோயிப் இக்பால் என்ற சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “டெல்லியின் நிலை குறித்து வேதனையடைந்துள்ளேன்; மிகவும் கவலைப்படுகிறேன். என்னால் தூங்க முடியவில்லை. மக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை. என் நண்பர் பாதிக்கப்பட்டுள்ளார்; மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால் ஆக்சிஜனோ வெண்டிலேட்டரோ கிடைக்கவில்லை. அவருக்கான ரெம்டெசிவர் பரிந்துரை என்னிடம் இருக்கிறது. ஆனால் நான் அதை எங்கிருந்து பெறுவது? அவரது குழந்தைகள் அதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு இன்று நான் வெட்கப்படுகிறேன். எங்களால் உதவ முடியவில்லை; அரசாங்கத்தினாலும் உதவ முடியவில்லை. நான் ஆறுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவன், மிகவும் மூத்தவன். இருந்தபோதிலும், யாரும் பதிலளிக்கவில்லை. எந்த நோடல் அதிகாரியையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் நான் கோர விரும்புகிறேன். இல்லையெனில் சாலையில்  சடலங்களாக இருக்கும்" என கூறியுள்ளார்.

 

சோயிப் இக்பால் கோரிக்கைக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரும், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த சோயிப் இக்பால், 2020 சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்