உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க பல்லாயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காக கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அண்மைய தகவலாக ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நெரிசலில் சிக்கி இறந்தவர்களில் அதிகப்படியானோர் பெண்கள், குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. சொற்பொழிவு நடத்தப்பட்ட இடம் மயானம் போல் காட்சியளிக்கிறது. 80 ஆயிரம் பேர் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்க முயன்றுள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். சொற்பொழிவு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில்தான் போலெ பாபா அண்மையில் குடியேறி வசித்து வந்துள்ளார்.
போலெ பாபா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. போலீஸ் அதிகாரியாக இருந்து பின்னர் சாமியாராக மாறிய போலெ பாபா ஏற்கனவே கொரோனா காலத்தில் அரசு நிறைய தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்த பொழுதும் கூட 50,000 பேரை சொற்பொழிவிற்காக வாங்க என அழைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில இந்து கடவுள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு 'நான் அவருடைய வழித்தோன்றல்; அவருடைய மறுபிறவி என்னிடம் வந்து தகவலை கேட்டு ஆசிபெற்றுக் கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும்' என்று சொல்லி தான் மக்களை சொற்பொழிவு கூட்டத்திற்கு சேர்த்துள்ளார் போலெ பாபா. ஆனால் தற்பொழுது வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய நபரான போலெ பாபா மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுபுறம் போலே பாபா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள போலெ பாபாவை தேடிவருகிறோம் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.