உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை, லக்கிம்பூர் வழக்கு விசாரணையின் கண்காணிப்பாளராக நியமித்து உத்தரவிட்டது. மேலும், வன்முறை குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவில் மூன்று மூத்த அதிகாரிகளையும் சேர்த்து உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தச் சூழலில் இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு விசாரணைக் குழு, லக்கிம்பூர் மாவட்ட நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், ‘விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது அலட்சியத்தால் நிகழ்ந்தது அல்ல என்றும், அந்த சம்பவத்தின் பின்னால் திட்டமிடப்பட்ட சதி இருந்ததாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.
விவசாயிகள் கொல்லப்பட்டதில் சதி இருந்தது என்ற சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்த எதிர்க்கட்சிகள், தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தின. மேலும், நேற்று (15.12.2021) நாடாளுமன்றத்தில் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், இன்று காலை மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, "அமைச்சர் (அஜய் மிஸ்ரா) பதவி விலக வேண்டும். அவர் ஒரு கிரிமினல். லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலையைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும். அதில் அமைச்சரின் பங்குள்ளது" என்றார். அப்போது பாஜக உறுப்பினர்கள் எழுந்து ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் மாநிலங்களவையிலும் லக்கிம்பூர் கேரி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் முயல, அதற்கு சபாநாயகர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்ப தொடங்கினர். இதன் காரணமாக மாநிலங்களவையும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு இரு அவைகளும் கூடியபோதும், எதிர்க்கட்சிகள் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து இரு அவைகளும் நாளை காலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.