கரோனா தடுப்பூசி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வது அதிர்ச்சிகரமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், இதற்கான தடுப்பு மருந்துகளை மக்களுக்கு விநியோகிக்கும் பணிகளைப் பல்வேறு நாடுகள் தொடங்கியுள்ளன. அந்தவகையில், இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை ஐ.சி.எம்.ஆர். மற்றும் புனேவில் உள்ள ஆய்வகத்துடன் இணைந்து 'பாரத் பயோடெக் நிறுவனம்' தயாரிக்கிறது. அதேபோல் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கிறது. இவ்விரு மருந்துகளுக்கும் மத்திய நிபுணர் குழு ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனமும், சீரம் மருந்து நிறுவனமும் இந்தியாவில் மூன்றாவது கட்ட பரிசோதனையை முடிக்காதபோது எவ்வாறு இரு நிறுவனங்களின் மருந்துகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்சனையை அரசியலாக்குவது ஏற்க முடியாதது, மிகவும் அதிர்ச்சிகரமானது. கரோனா தடுப்பூசிகளுக்கு அறிவியல் பூர்வமான வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதித்ததை சசி தரூர், அகிலேஷ் யாதவ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நம்பிக்கையிழக்கச் செய்யக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.