இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
பிரசாந்த் கிஷோரை சந்தித்த பிறகு சரத் பவார், எதிர்கட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றை நடத்தினார். அதன்பிறகு மம்தா பானர்ஜி டெல்லியில் சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பது குறித்து விவாதித்தார்.
இதன்பிறகு சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபில், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளித்தார். அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தின்போது பாஜகவை ஒன்று சேர்ந்து எதிர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல்வர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இரவு விருந்து அளிக்கவுள்ளதாகவும், இந்த விருந்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்தநிலையில் வருகின்ற 20 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், மம்தா பானர்ஜி, மு.க ஸ்டாலின், உத்தவ் தாக்ரே, ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் இந்த காணொளி வாயிலான ஆலோசனையில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில் பாஜக அரசை எதிர்ப்பதற்கான வியூகங்கள் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.